மக்களின் வாழ்வாதாரச் சிதைப்பைக் கண்டித்து போராட்டம்:

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஏற்பாடு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை திட்டமிட்டு சிதைத்து, கிராமப்புற ஏழை–எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அதற்கு முழுமையாகத் துணைபோகும் அ.தி.மு.க.வின் அரசியல் இரட்டை வேடத்தையும் கடுமையாகக் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இன்று 24/12/2025 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தளி ரோடு, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

கே.ஈஸ்வரசாமி தலைமையில் கண்டன முழக்கங்கள்:

இந்தக் கண்டனப் போராட்டத்திற்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளருமான திரு கே. ஈஸ்வரசாமி அவர்கள் தலைமையேற்று, ஒன்றிய அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிரான செயல்பாடுகளைத் தகுந்த ஆதாரங்களுடன் மக்கள் முன் எடுத்துரைத்தார். நூறுநாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய நேர்மறை மாற்றங்களையும், தற்போது அந்தத் திட்டம் படிப்படியாக பலவீனப்படுத்தப்படுவதால் விவசாயக் கூலித் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்கள் சந்திக்கும் பல்வேறு விதமான இன்னல்களையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

கழக நிர்வாகிகள், தொண்டர்கள், நூறுநாள் பணியாளர்கள் பங்கேற்பு:

இந்தப் போராட்டத்தில் உடுமலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் நூறுநாள் பணியாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

போராட்டத்தின் போது, நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள கூலித் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும், திட்டத்தை சீர்குலைக்கும் அனைத்து முயற்சிகளையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கண்டனப் போராட்டம், கிராமப்புற மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு முக்கியப் போராட்டமாகவும், சமூக நீதி மற்றும் மக்கள் நலனுக்கான உறுதியான குரலாகவும் அமைந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top