2026-ஆம் ஆண்டின் பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைத்திருநாள், மக்களால் மிகுந்த உற்சாகத்துடனும், பாரம்பரியப் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. விவசாயத்தையும் உழைப்பையும் போற்றும் இந்த விழா, தமிழர்களின் வாழ்வியலோடு ஆழமாக பின்னிப் பிணைந்த ஒன்றாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தைத் திருநாளை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் மூவாயிரம் பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு, மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பயனாளர்கள் விபரக்குறிப்பு:

இந்த முன்னெடுப்பின் மூலம் சுமார் 2.2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமன்றி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரடியாக பயனடைகின்றனர். இந்த நலத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு கிட்டத்தட்ட ரூபாய் 6,936 கோடியை செலவழித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

இதனுடன் சேர்த்து, பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவையும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்து விநியோகிக்க மட்டும் தமிழ்நாடு அரசு ரூபாய் 248 கோடியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரருக்கும் ஐநூறு ரூபாய் நோட்டுகளாக 6 நோட்டுகள் வழங்கப்படவுள்ளன. இதனை ஜனவரி 8-ஆம் தமிழக முதல்வர் ஐயா திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே தொடங்கியும் வைத்துள்ளார்.

இதன் மூலம், பொருளாதாரம் சார்ந்து எந்தவொரு வேறுபாடுகளும் இன்றி அனைத்து மக்களுக்கும் பண்டிகைக் காலத்தில் கூடுதல் ஆதரவு கிடைப்பதுடன், பொங்கல் திருநாளை கவலை இல்லாமல் கொண்டாடும் சூழலும் உருவாகியுள்ளது.

உடுமலைத் தொகுதியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு:

இந்த நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருவதால், இந்த ஆண்டின் பொங்கல் விழா தமிழகமெங்கும் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலைத் தொகுதியில் ஒன்றிய கழக செயலாளரான திரு. எஸ்.கே.மெய்ஞான மூர்த்தி (எ) SK. தங்கராஜ் அவர்கள் முன்னிலையில், 08/01/2026 அன்று உடுமலை பகுதி மக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, அரசின் இந்த மக்கள் நல முன்னெடுப்பிற்கு தங்களது நன்றியையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

மேலும், இந்தப் பொங்கல் நலத்திட்டம் மூலம் அரசு–மக்கள் உறவு மேலும் வலுப்பெறும் வகையில் அமைந்துள்ளது. பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்கள், சமூக சமத்துவத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் உறுதி செய்கின்றன. குறிப்பாக கிராமப்புற மக்களும், கூலி தொழிலாளர்களும், விவசாயக் குடும்பங்களும் இந்த உதவிகளால் நேரடியாகப் பயனடைவது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பாரம்பரிய திருநாளான தைப்பொங்கலை, எந்தவித கவலையும் இன்றி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top